Skip to main content

"குறிப்பிட்டால் மட்டும் போதாது, உண்மையாக இருக்க வேண்டும்" - கமல் விளாசல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

kamal about the kerala story movie issue

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையின் போது படத்திற்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. 

 

பின்பு பல எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த 5 ஆம் தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து வர மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரள ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இதை எதிர்த்து படக்குழு தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் விளக்கமளிக்க வேண்டி நோட்டீஸ் அனுப்பியது. பின்பு தமிழ்நாடு அரசு சார்பில் மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மறைமுகமாகத் தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டு படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிட நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது. இப்படி படம் வெளியாவதற்கு முன்பு, பின்பு ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த படத்தை பாஜக மற்றும் வலது சாரிகள் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இப்படம் தற்போது வரை ரூ.200 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இப்படம் குறித்து பல திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், "நான் முன்பு கூறியது போல பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன் நான். ஏனென்றால் படத்தில் மட்டும் இது உண்மை கதை என குறிப்பிட்டால் போதாது. நிஜமாகவே அந்த கதை உண்மையாக இருக்க வேண்டும். இப்படத்தில் உண்மை இல்லை" என்றார். கமல்ஹாசன் தற்போது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விழாவில் பங்கேற்பதற்காக அபுதாபி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது செய்தியாளர்களின் கேள்விக்கு இந்த பதிலை அளித்துள்ளார். அந்த விருது நிகழ்வில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்