கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் கூட்டு பிரார்த்தனை குறித்தும், எஸ்.பி.பி குணமாக வேண்டியும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..."வானூதிர்த்த கதிராக நெல்லூரில் வந்துதிர்த்த இசையே! குழல் இனிதா? யாழ் இனிதா? என்றால் நின் குரலே இனிதென்பேன். முக்கனி சாறெடுத்து கொம்புத்தேனில் முகிழ்தெடுத்த அருஞ்சுவைக்கு மேலானது நின் குரலே சுவையென்பேன். அங்கிங்கெனாதபடி எங்கும் குரல் கேட்க எட்டுத்திக்கும் எதிரொலிக்க எழுந்து வா! பாலு, விரைந்து வா! இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா! பாலு விரைந்து வா! தேனிசை தென்றலும் ஏழிசை சுரங்களும் நின் வரவுக்காக காத்திருக்க எழுந்து வா! பாலு விரைந்து வா! ஆம்.. பாரதிராஜா வேண்டியபடி அகிலம் ஆண்டவனைப் பிரார்த்திக்க. நீ வருவாய்! திருவாய் மலர்வாய்! -கலைப்புலி எஸ் தாணு" என கூறியுள்ளார்.