நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராஜா குருசாமி, நடிகர் முனீஸ்காந்த் மற்றும் நடிகை ஸ்வாதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது, ”இந்தப் படத்திற்காக ஒரு அப்பாவியான கதாபாத்திரத்தை எழுதியவுடன் அதற்கு முனீஸ்காந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கலையும் கலை சார்ந்த ஆட்களையும் பார்த்தால் அவர்கள் மீது இரக்கப்படுகிற கேரக்டர் இது. படத்தில் அவர் வருத்தப்பட்டால் நமக்கும் வருத்தம் ஏற்படும். குழந்தைகளுக்கு முனீஸ்காந்த் சாரை மிகவும் பிடிக்கும். மக்களை முழுக்க முழுக்க சந்தோஷப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு படம் இது. அதில் ஒரு நல்ல மெசேஜும் இருக்கிறது.
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. காட்சிகள் குறித்த தங்களுடைய எண்ணங்களை நடிகர்கள் என்னிடம் வெளிப்படுத்துவார்கள். கதைக்கு அது தேவையாக இருந்தால் நானும் அனுமதிப்பேன். இவர்கள் அனைவரையுமே எனக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்பதால் நல்ல புரிதல் இருந்தது. நாங்கள் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். காடப்புறா என்பது கற்பனையான ஒரு பெயர். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க கிராமத்தின் மணம் இருக்கும். குடும்பத்தோடு அமர்ந்து அனைவரும் ரசிக்கும்படியான ஒரு ஜனரஞ்சகமான படமாக இது இருக்கும்” என்றார்.