செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியதாவது:- “திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரத்தைத் தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல, அந்த பொருள்களின் விலையை கட்டுப்படுத்தவும் பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம்.
![kadambur raju](http://image.nakkheeran.in/cdn/farfuture/m65vCp3uJsulNA0AaqquvnTsKPQGY1BKRJYVLoAAKlQ/1567508184/sites/default/files/inline-images/kadambur-raju_1.jpg)
திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகள் வெளிப்படையாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட சில திரையரங்குகளை சோதனை முயற்சியாகக் கண்காணித்து வருகிறோம்.
படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அமலுக்கு வந்தால், இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்கான, கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்” என்றார்.
இதற்கு பல தயாரிப்பாளர்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸின் உரிமையாளர் எஸ்.ஆர். பிரபு இதுகுறித்து தெரிவிக்கையில், “இது 200 சதவீதம் சாத்தியமானது. வரவேற்க வேண்டிய ஒரு விஷயம். தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க வருபவர்களுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொடுக்கலாம். ஆன்லைன் புக்கிங்குக்கான சேவை கட்டணம் தான் இங்கு முக்கிய பிரச்சினை. மற்ற நாடுகளில் இந்த கட்டணம் 2 முதல் 4 சதவீதம் மட்டும்தான்.
அதாவது 100 ரூபாய்க்கு 2 ரூபாய். ஆனால் இங்கு அப்படி இல்லாமல் ஒரு டிக்கெட்டுக்கு 30 முதல் 40 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதை குறைத்து ஒழுங்குபடுத்தவேண்டும். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார்.