Skip to main content

90ஸ் கிட்ஸுக்கு மெமரி... அரசியல்வாதிகளுக்கு அலர்ஜி... - கபிலன் வைரமுத்துவின் 'கோமாளி' பாடல்

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

'ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே

ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி
காலம் போச்சு அன்னைக்கு
பிபி சுகர வாட்ச்சில் பார்த்து
வாழ்க்க போச்சு இன்னைக்கு'

விரைவில் திரைக்கு வர இருக்கும் 'கோமாளி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் சில வரிகள்தான் மேலே சொல்லப்பட்டுள்ளவை. இந்த பாடல் வரிகளில் ரஜினி முதல் மோடி வரை அனைவரையும் தொட்டுச் சென்றுள்ளார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து.

 

komali poster



90ஸ் கிட்ஸின் நினைவுகளால் சோசியல் மீடியா நிரம்பிவழிகிறது. தங்கள் ஏக்கங்களை மீம்சாக வெளியிட்டு வடிகால் தேடுகின்றது 90ஸ் கிட்ஸ் சமூகம். இன்னொரு புறம் இன்னும் சிங்கிளாகத் திரியும் சில 90ஸ் கிட்ஸை கண்டபடி கலாய்த்து மீம்ஸ் போட்டு பழிவாங்குகிறது 2K கிட்ஸ் சமூகம். இப்படி எங்கும் பொங்கும் நாஸ்டால்ஜியாவை ஒரு பாடலாகவே எழுதிவிட்டார் கபிலன் வைரமுத்து. வரிக்கு வரி குதூகலம் ஏற்படுத்தும் இந்தப் பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளனர். ஒளியும் ஒலியும், வொயிட் அண்ட் பிளாக் டிவி, 'மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்' பாடல் ஆகியவை தொடங்கி ரெஸ்ட்லிங் கார்ட்ஸ், மேரியோ வரை அத்தனை அழகான நினைவுகளை சேர்த்து இந்தப் பாடலுக்கு லிரிக்கல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் எவர்க்ரீன் நினைவுகளைத் தூண்டியுள்ள கபிலன் வைரமுத்துவின் வரிகள் இன்னொரு பக்கம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளன.

'சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருச்சே'

என்ற இந்த வரிகளுக்கு சமூக ஊடக ரஜினி ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு கபிலன் வைரமுத்து பதில் அளித்துள்ளார். "பலரை போல நானும் அவருடைய தீவிர ரசிகன்தான். அவருடைய அரசியல் பார்வை என்பது வேறு. அதைப்பற்றி விவாதிக்கும் அளவுக்கு, அவரும் அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை. எனக்கும் அனுபவம் இல்லை. ஆனால் சினிமாவில் அவர் அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். பாட்டி என்பது முதல் தலைமுறைக்கான குறியீடு. பேத்தி என்பது மூன்றாம் தலைமுறைக்கான குறியீடு. மூன்றாம் தலைமுறை நடிக்க வந்த பிறகும் அவர் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் என்பதுதான் அதன் பொருள். அதைத் தவறாகத்தான் புரிந்துகொள்வேன் என்று அடம் பிடிப்பவர்களை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது" என்று 'மேக் இட் சிம்பிள்'ளாக முடித்துவிட்டார்.

 

 

kabilan aadhi



'நாட்டார் கடை நாயர் கடை
எல்லா இடத்திலும்
நாகலாந்தும் மிசோரமும்
வேல செய்யுதே'

இந்த வரிகளும் இன்னொரு பக்கம் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 'இந்தியா ஒரு நாடு, அதற்குள் திறமையுள்ள யாரும் எங்கும் வேலை செய்யலாம். அதை கிண்டல் செய்வது போல இருக்கும் இந்த வரிகள் தவறானவை' என்கிறது ஒரு தரப்பு. 'இந்த வரிகள் தமிழ்நாட்டில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள் என்று குறிப்பிடுகிறதா?' என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த கபிலன், "இல்லை. அதற்கு முந்தைய வரிகளை நீங்கள் படிக்க வேண்டும். 'தகுதி இல்லா தறுதலைக்கும் திமிரு இருக்குது. தமிழ்நாட்டில் பொழக்கணும்னா ஒடம்பு வலிக்குது' - அதனால்... 'நாடார் கட நாயர் கட எல்லா எடத்திலும் நாகாலாந்தும் மிசோராமும் வேல செய்யுது'. மதுவுக்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் எந்த பொறுப்பும் இல்லாமல் வெட்டித் திமிரோடு சுற்றி கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை சாடுகிற வரிகள் இவை. இது ஒரு சுய விமர்சனம்" என்றார். உண்மை இருக்கிறதுதானே?


'கோவிலுக்குள் ஆண்டவனை பார்த்த ஆளத்தான்
உன் கலகத்துக்கு அடியாளா கோர்த்துவிட்டியே'

என்ற வரிகள் மத உணர்வை ஊட்டி கலகம் ஏற்படுத்தும் கட்சிகளை குறிப்பிடுகிறது. இப்படி, பாடல் முழுவதுமே ஜாலியாக மட்டுமில்லாமல் பலரை காலி செய்வதாகவும் இருக்கின்றது.

'நான் எங்க இருக்கேன் எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா யாரோட ஆட்சி'

என்ற வரிகளைப் பார்க்கும்போது பல வருடங்களுக்கு முன்பு நினைவிழந்த ஒருவர் திடீரென விழித்து தற்போதைய இந்தியாவை பார்த்து பாடுவதுபோல இருக்கிறது. படத்தின் கதையும் அதுவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. பாடல் வரிகளை கவனிக்க நேரமில்லாமல் கடந்து செல்லும் இந்த காலத்தில், கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இந்தப் பாடலின் அத்தனை வரிகளும் பல்வேறு விதமாக கவனம் ஈர்த்து, விவாதங்களையும் ஏற்படுத்தியிருப்பது நல்ல விஷயம்தான்.   

 


 

சார்ந்த செய்திகள்