கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். முதலில் இதை தற்கொலை வழக்காக எடுத்து மும்பை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி, இவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருட்களை அவர்கள் வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், ரியா சக்ரபோர்த்தி, சோவிக் சக்ரபோர்த்தி உட்பட 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனுதாக்கல் செய்தார். அதன்பின் நீதிபதி, ரியா சக்கரவர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சோவிக் உட்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று மும்பை உயர்நீதிமன்றம் ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. பத்து நாட்கள் அவரது பகுதியிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மும்பையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரியாவின் தம்பிக்கு ஜாமீன் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் நடிகை ஹியூமா குரேஷி இதுகுறித்து ட்விட்டரில் தெரிவிக்கையில், “ரியா சக்ரபர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த கொலை சதி பற்றி பேச ஆரம்பித்த நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். உங்களது நோக்கம் நிறைவேற ஒரு பெண்ணின், அவரது குடும்பத்தின் வாழ்க்கையை நாசமாக்கியது குறித்து நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.