![Kaadhal Kannan](http://image.nakkheeran.in/cdn/farfuture/hYzPjPzyUn3vZgozwT9DMECUItBb012KjkoWZxZ0xvU/1656590485/sites/default/files/inline-images/6_68.jpg)
காதல், கோ உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகர் கண்ணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து சிறு பகுதி பின்வருமாறு...
சினிமாவில் நான் அறிமுகமாகிய காதல் படம் 2004ஆம் ஆண்டு வெளியானது. அந்த நேரத்தில் சுனாமி மாதிரியான பிரச்சனைகள் இருந்தன. அதையும் தாண்டி அந்தப் படம் வெற்றிபெற்றது. அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது.
இயக்குநராக வேண்டும் என்ற ஆசையோடுதான் சினிமாவுக்கு வந்தேன். இயக்குநர் சங்கர் என்னுடைய தூரத்துச் சொந்தம் என்பதால் அவரிடம் உதவி இயக்குநராகச் சேரலாம் என நினைத்தேன். அந்த உறவை வைத்து சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று நினைத்ததுதான் நான் செய்த முதல் தவறு. அவர் உறவுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். திறமை இருக்குறவன் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்கு வருவான் என்று நினைக்கக்கூடியவர் அவர். அவருடைய அலுவலகத்தில் இருந்த ஒரு துணை இயக்குநர்தான் என்னை நடிக்க அறிவுறுத்தினார். அதன் பிறகுதான் நடிக்க ஆரம்பித்தேன். நடித்த படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று புகழ் கிடைத்ததால் நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
சிபாரிசு என்பது நல்ல விஷயம்தான். திறமையுள்ள ஒருவருக்கு சிபாரிசு செய்யலாம். நானும் சிவகார்த்திகேயனும் உறவினர்கள் என்பதால் நியூஇயர் மீட்டில் நாங்கள் சந்திப்போம். ரெமோ படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியிருந்தார். எனக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டேன். போன் பண்ணியும் கேட்டிருக்கிறேன். இரண்டு முறை கேட்டும் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்டால் நன்றாக இருக்காது என்பதால் நானும் அப்படியே விட்டுவிட்டேன்.
சிலர், ஒரு வெற்றியைத் தொட்ட பிறகு நம்மை அழைப்பார்கள். சினிமா துறையில் அப்படி ஒரு நிலைமை இருக்கிறது. கடவுள் புண்ணியத்தில் துணை நடிகராகச் சின்ன புகழ் கிடைத்துள்ளது. நான் இன்னும் நிறைய தூரங்கள் கடக்க வேண்டியுள்ளது. அந்த தூரத்தைக் கடந்து செல்லும்போது நான் அவருக்கு நினைவுக்கு வரலாம். அப்போது அவர் கூப்பிடலாம். இதைத் தவறு என்று நான் சொல்லவில்லை.
டாக்டர் சீட்டுக்காக ஒரு பொண்ணுக்கு உதவி செய்கிறார், உங்களுக்குச் செய்யமாட்டாரா என்று நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்வேன். அவர் நினைத்தால் செய்ய முடியும் என்பதெல்லாம் அவருடைய மனசைப் பொறுத்தது. அதை நாம் குறை சொல்ல முடியாது. அவருடைய மனதிற்குள் நான் இன்னும் செல்லவில்லை என்று நினைக்கிறேன். என்றைக்கு அவர் மனதிற்குள் செல்கிறேனோ, அன்றைக்கு அவருடன் நான் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.