யோகிபாபு, நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'சுறா', 'அழகை மலை' போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் இயக்க, உபாசனா, இமான் அண்ணாச்சி, சென்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'டிஸ்கவர் ஸ்டுடியோஸ்' சார்பில் இப்படத்தை தயாரிக்கும் சுவாமிநாதன் ராஜேஷ், படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழா மேடையில் தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் சென்ட்ராயன் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் இவ்விழாவில் பேசிய கே.ராஜன், “தம்பி ராஜேஷுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இப்போது தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் ஆகிவிட்டீர்கள். ஆனால் இதற்கு அடுத்து நீங்கள் படம் தயாரிக்கக் கூடாது. முதலில் 5 அல்லது 10 படத்துக்கு இசையமைத்து பெரிய ஆள வாங்க. நிறைய சம்பாதியுங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
இதனிடையே குறுக்கிட்ட சென்ட்ராயன், "எங்க தயாரிப்பாளர், அவர் எங்க முதலாளி, அவரு படம் பண்ணத்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார். இதை பார்த்து ஆவேசமடைந்த தயாரிப்பாளர் கே. ராஜன், "போய் உட்காரு, நாங்க வேற வேலை வாங்கி தருகிறோம். ஆனால் அவரை வேலை இல்லாமல் ஆக்கிட்டாதீங்க. உட்காரு தம்பி, உங்க வேலைக்காக நாங்கள் வெளியே போகணுமா... எங்களுக்கு தெரியும். பெருசா எதிர்ப்பு தெரிவிக்க வந்துட்டாரு. நான் என்ன சொன்னேன், இசையமைப்பாளராக இருந்து படமெடுக்க வந்துட்ட. ஆனால் படம் எடுக்கிறதில் இருக்கும் டார்ச்சர் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் நடிகர்கள் ஒன்னும் தெரியாது, அதனால்தான் நல்ல சம்பாதிச்சுட்டு படம் எடுக்க வாங்க, அப்போதான் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று சொன்னேன். ஆனால் நீங்க இப்படி இடையில் புகுந்து டிஸ்டர்ப் பண்ணட்றீங்க, அப்படி எல்லாம் பண்ணக்கூடாது, ஏன்னா நான் பலபேரை டிஸ்டர்ப் போன்றவன்” என தெரிவித்துள்ளார்.