வில் மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பா. விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'ஆரூத்ரா'. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர், பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி, மேகாலீ, யுவா, சோனி சிரிஸ்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது...
"என்னுடைய உதவியாளராக பா.விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது. இந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.