Skip to main content

வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்த ஜூனியர் என்.டி.ஆர்! 

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
junior ntr request to vetrimaaran

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேவரா’. இப்படத்தை மிக்கிலினேனி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா ஆகியோர் தயாரித்திருக்க  பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.   

இந்நிகழ்ச்சியில் ஜூனியர் என்.டி.ஆர் பேசுகையில், “தேவரா படம் நன்றாக வருவதற்கு தூணாக இருந்தது படக்குழுவினர்கள் தான். அவர்களின் உழைப்பை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். என்னை நம்புங்கள், இந்த படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். இந்த படத்தில் கலையரசன் தனித்துவமாக நடித்துள்ளார். அதே போல் ஜான்வி கபூர் நடிப்பை பற்றி என்ன சொன்னாலும் அதை வார்த்தைகளால் அடக்கிவிடமுடியாது. அந்தளவிற்கு அவரது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷலான இடம். ஆர்.ஆர்.ஆர். பட வெளியீட்டுக்கு பிறகு, நாம் மொழியால்தான் மட்டும்தான் பிரிந்திருக்கிறோம். ஆனால், சினிமாவால் பிரிக்கப்படவில்லை என்று தெரிந்தது. நம் வெவ்வேறு மொழிகளை பேசுகிறோம். ஆனால் சினிமா என்ற ஒரே ஒரு வார்த்தையால் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இது நல்ல வசூல் செய்யும் திரைப்படங்கள் மூலம் நிரூபணமாகிறது” என்றார். அதன் பிறகு அவரிடம் நேரடி தமிழ் படத்தில் எப்போது நடிக்கவுள்ளீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “இதை எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்கப் போகிறேன். தயவுசெய்து என்னுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுங்கள், அந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்துகொள்ளலாம்” என மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.

கடந்த ஆண்டு வெற்றிமாறன், விடுதலை பட தெலுங்கு வெளியீட்டின் போது, “அசுரன் படத்திற்குப் பிறகு, ஊரடங்கு சமயத்தில் ஜூனியர் என்டிஆரை சந்தித்துப் பேசினேன். படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நிச்சயம் ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம். அப்படம் திரைக்கு வர காலதாமதம் ஆகும்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்