ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.
இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது, 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பேட்டியில் "மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர், அமெரிக்காவில் உள்ள மார்வெல் ஸ்டுடியோவின் நிர்வாகி விக்டோரியா அலோன்சோவை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் சில நிமிடங்களே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஏதேனும் வாய்ப்பு அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.