தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். பிரபல மலையாள நடிகரான இவர் 'ஜகமே தந்திரம்' அடுத்து 'புத்தம் புது காலை விடியாதா' மற்றும் 'பஃபூன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'இரட்டா' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜோஜு ஜார்ஜ், எந்தக் காரணமும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களை எதிர்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள். நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால் காரணமின்றி என்னைத் துன்புறுத்துவதை நீங்கள் நிறுத்தினால் நல்லது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி பின்பு நீக்கியுள்ளார்.
மேலும் தேவையற்ற பிரச்சனைகளை சமீப காலமாக சந்தித்து வருவதாகவும், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதேபோல் 'பிரேமம்' படம் மூலம் பிரபலமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 'கோல்ட்' படத்திற்காக தொடர் எதிர் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்று ட்ரோல் பதிவு தொடர்ந்தால் இணையத்தில் நான் இருக்கமாட்டேன் எனக் கடந்த மாதம் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.