கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் என திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசுகையில், “எல்லாரும் இறந்த பின்பு கடவுளாகி விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில பேர் மட்டும் வாழும்போதே கடவுளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருத்தர் தான் விஜயகாந்த். அவருடன் எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு. அதை நானே வச்சிக்கிறேன். ஷேர் பண்ண முடியவில்லை. ஆனால் அவர் நம்மிடம் எவ்வளவோ ஷேர் பண்ணியிருக்கார். நமக்காக எவ்வளவோ விட்டுட்டு போயிருக்கார். அந்த நல்ல விஷயங்களில் எனக்கு ஒரு வேண்டுகோள். பள்ளி பாடப் புத்தகங்களில் கேப்டனை பத்தி வர வேண்டும். நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அவர் இருந்ததினால் சொல்லவில்லை. மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு சின்ன தலைப்பில், நல்லா வாழ்ந்தா மக்கள் அவர்களை மனதில் வச்சிப்பாங்க. அதை சொன்னாலே போதும். வேறெதுவும் சொல்ல தோணவில்லை. அவர் சொன்னதைத் தான் நானும் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். சத்ரியனுக்கு சாவில்லை” என்றார்.