ஜெயம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி, உச்ச நட்சத்திரமாக இன்று உயர்ந்திருக்கும் ஜெயம் ரவி, தன்னுடைய பிறந்தநாளை இன்று பத்திரிகையாளர்களுடன் கொண்டாடினார்.
அந்த சந்திப்பில் பேசிய ஜெயம் ரவி, “வழக்கமாக என்னுடைய பிறந்தநாளன்று இதுபோல நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததில்லை. ஆனால், இதுவரை ஏன் சந்திக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன். நான் சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய இத்தனை வருட பயணத்தில் பத்திரிகையாளர்கள் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இன்று உங்களைச் சந்தித்திருக்கிறேன்.
இந்த 20 வருடங்களில் 25 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். பிற நடிகர்களோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனக்குப் பிறகு வந்த நடிகர்கள் 45 படங்கள்வரை நடித்துவிட்டனர். எனக்கு எண்ணிக்கை முக்கியமில்லை; படங்களின் தரம்தான் முக்கியம். இது எனக்கு அப்பா சொல்லிக்கொடுத்தது.
ஜெயம் படம் மிகப்பெரிய ஹிட்டாகி 150 நாட்கள் ஓடிய பிறகும் அடுத்த 8 மாதங்கள் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தேன். எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. ‘ஹிட் கொடுத்துட்டோம்னு அவசர அவசரமா படம் பண்ணாத, நல்ல படம் வரும்வரை வீட்டில் உட்காரு, ஒன்னும் தப்பில்லை’ என்று அப்பா சொன்னார். அதை இன்றுவரை பின்பற்றுகிறேன். அதனால்தான் என்னுடைய தோல்விப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ரசிகர்கள் எனக்கு ஒருபுற பலம் என்றால் பத்திரிகையாளர்கள் மற்றொருபுற பலம். உங்களுடைய பாராட்டும் விமர்சனமும்தான் என்னை தன்னடக்கத்தோடு வைத்திருக்கிறது. உங்களுடைய ஆதரவை எனக்கு தொடர்ந்து கொடுங்கள்” எனத் தெரிவித்தார்.