அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, நடித்துள்ள படம் ‘ஜமா’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைகளில் பல குழுக்கள் இருக்கும் நிலையில் அதில் ஒரு குழுவினரை 'ஜமா' என அழைக்கின்றனர். அவர்களின் தெருக்கூத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற‘ கூழாங்கல்' படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில் "நான் தெருக் கூத்தை சார்ந்தவன். என்னுடைய கிராமத்தில் சொந்த பந்தங்கள் பலர் தெருக் கூத்தில் இன்றளவும் நடித்து வருகின்றனர். தற்போது வந்த கலைப் படைப்புகள், தெருக்கூத்தில் நடிப்பவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிற மாதிரியும், அந்தக் கலை அழிவு நிலையில் இருப்பதாகவும் ஒரு தவறான முன்னுதாரணத்தை சொல்வதுபோல உள்ளது.
ஆனால் அப்படி யாரும் கஷ்டப்படுவதில்லை. நான் தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைக் கவனித்து வருகிறேன். படத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் எதைப் பற்றி பேச வேண்டுமென்றால், பெண் வேடமிட்டு நடிப்பவர்களை பற்றிதான் பேச வேண்டும், ஏனென்றால் அவர்கள் தான் கிண்டல், கேலிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில கிராமங்களில் அவர்களின் புடவை இழுத்து பாலியல் துன்புறுத்தலும் ஏற்படுகிறது, அதில் சிலவற்றை மட்டும்தான் படத்தில் காட்சிப்படுத்த முடிந்தது. எந்த அளவிற்கு உண்மையாக அவர்களைப் பற்றி கூறமுடியுமோ அந்த அளவிற்கு படத்தில் பேசியுள்ளோம்" என்றார்.