இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.
இதையடுத்து சென்னையில் நேற்று நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் 41- ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இயல் செல்வம் விருதினை ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து பேசிய முதல்வர், "என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜெய்பீம்' அந்த படம் பலரது மனசாட்சியை உலுக்கியது" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஜெய் பீம் படத்தின் இயக்குநர், "பழங்குடி மக்கள் கால்தேய நடந்து கிடைக்காத பட்டாவும், சான்றிதழ்களும் இப்போது அதிகாரிகள் தேடி போய் அம்மக்களுக்கு தருகிறார்கள். இதற்கெல்லாம் ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு முதல்வர் இட்ட உத்தரவினால் தான். ஜெய் பீம் படத்தில் நாங்கள் நாதியற்றவர்கள் என்ற ஒரு வசனம் வரும், நாதியற்றவர்கள் என்றால் முகவரின் இல்லாதவர்கள் என்று பொருள். அந்த முகவரி அற்ற மக்களுக்கு முகவரி கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இப்போதுதான் படத்தின் நோக்கம் வெற்றி பெற்றிருப்பதாக கருதுகிறேன்" என்றார்.