சரவணன் அபுபக்கர் இயக்கத்தில்‘எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்’ என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் விஜி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், “ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தலைவரும் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினார். நீங்களும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், நீங்கள் உங்களுடைய தலைவருடைய படத்தையே பாதுகாக்க முடியாதவர்கள் எப்படி ரசிகராக இருக்க முடியும் என்று தெரியவில்லை. எப்படி நீங்களெல்லாம் படங்களை திருட்டு தனமாக பார்க்க அனுமதிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய், அஜித், சூர்யா என்று யாராக இருந்தாலும் சரி, நீங்கள் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணம் ஒரு தயாரிப்பாளர். அவரை இப்பட் நஷ்டமடைய விடாதீர்கள். உங்களுடைய ரசிகர்களை வைத்து கண்டுபிடியுங்கள். இன்றைக்கு கண்டுபிடிக்க முடியாதது எதுவுமே இல்லை. சீக்கிரம் இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.
சூப்பர் ஸ்டார் நினைத்தால் பிரதமர் மோடியிடம் சொல்லி தமிழ் ராக்கர்ஸை பிடிக்கலாம். அமெரிக்காக்காரன் குண்டு போட்டால் கூட கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்கிறார்கள். இந்த தமிழ் ராக்கர்ஸை மட்டும் எப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஹீரோ ஹீரோயின்கள் தயாரிப்பாளர் மண்ணாக போகட்டும் என நினைக்காதீர்கள். அவர்கள் நன்றாக இருந்தால் மட்டும்தான் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும்.
யாரு படங்களை திருட்டுத்தனமாக பார்த்தாலும் நாங்களே சென்று அடிப்போம். அந்த காலத்தில் அப்படிதான் இருந்தது. இப்போது அப்படியில்லை. அந்தமாதிரிதான் நீங்கள் இருக்க வேண்டும் இல்லையென்றால் சினிமா அழிந்துவிடும். தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திருட்டத்தனமாக படங்களை பார்க்கின்றனர். அரசாங்கம் நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஈசியாக கண்டுபிடிக்கலாம்.
ஆந்திரா நமது சகோதர நாடுதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஆனால், ஆட்சி செய்யவிட மாட்டோம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களை நாங்கள்தான் எங்களை ஆள வேண்டும். என்னா வேண்டுமானாலும் பண்ணட்டும் ஆனால் தமிழன் ஆட்சி பண்ண வேண்டும். தமிழ் சினிமாவில் கூட பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவார்கள். இதுவே ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ போய் பாருங்கள். பணிபுரிய விடவே மாட்டார்கள். அந்த காலத்தில் கன்னட சினிமாவில் பணிபுரிந்ததர்காக இரவில் கத்தி எடுத்துக்கொண்டு குத்த வந்தார்கள்” என்று கூறினார்.