கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் 7 கோடி ரூபாய்க்கு மேல் குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு கடந்த ஆண்டு ஈஸ்டரை முன்னிட்டு ஒரு காதல் கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த கடிதங்களை நிறுத்தக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அதில் சுகேஷ் சந்திரசேகர், சிறையிலிருந்து கொண்டே மிரட்டி வருவதாகவும் அவர் எழுதும் கடிதங்கள் என் தனிப்பட்ட உரிமைகளைப் பாதிப்பதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார். மேலும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா சுகேஷ் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் வாபஸ் பெற்றுள்ளார்.