Skip to main content

"இது இயக்குநர்களின் கையில் இல்லை" - இயக்குநர் கின்ஸ்லின் பேச்சு! 

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

"It's not up to the directors"- Director Kinslin's speech!

 

‘18 ரீல்ஸ்’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11- ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (01/11/2022) நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி, கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் ராமர், கலை இயக்குநர் டான் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் கின்ஸ்லின் பேசுகையில், ''தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரியிடம் 'டிரைவர் ஜமுனா' படத்தின் கதையைச் சொன்னவுடன் அவருக்கு பிடித்தது. அவரிடம் நுட்பமான கதையறிவு உண்டு. கதையில் பல இடங்களில் பல சந்தேகங்களை எழுப்பினார். ஆனால் அதற்கான தீர்வினை நானே எடுக்கும் முழு சுதந்திரத்தையும் வழங்கினார்.

 

இந்தப் படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான படம். வாலாஜாபாத் எனும் இடத்திலிருந்து ஈ.சி.ஆர் எனும் இடத்திற்கு கூகுளில் பயண நேரம் எவ்வளவு? என்று கேட்டால், '90 நிமிடம்' எனப் பதிலளிக்கும். அந்த 90 நிமிடமும், கதை தொடங்கிய பிறகு இருபதாவது நிமிடங்களுக்கு இந்தப் பயணம் தொடங்கும். ஆக, இரண்டு மணி நேரம் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த திரைப்படம்.‌ நெடுஞ்சாலை பயணமும், காரிலும் தான் மொத்தத் திரைக்கதையும் பயணிக்கும். இதனைத் திரைக்கதையாக எழுதும் போதும், இதனைக் காட்சிப்படுத்தும் போதும் ரசிகர்களுக்கு சோர்வைத் தராமல் இருப்பதற்கான விசயங்களை இணைத்தோம். திரைக்கதை காரில் பயணிப்பதால் கதாபாத்திரங்களுக்கு இடையே நீண்ட நேரம் உரையாடலையும் வைக்க இயலாது. இதனால் நடிகர்களின் முகபாவனைகளையும், நடிப்புத் திறனையும் வைத்து தான் காட்சிகளை நகர்த்த வேண்டியதிருந்தது.

 

டிரைவராக நடிக்கும் கலைஞரின் நடிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் இந்த திரைக்கதை வெற்றி பெறாது. முழு கதைக்கும் கதையின் நாயகி தான் மையப் பாத்திரம். அவருடைய தோளில் சுமக்க வேண்டிய திரைக்கதை இது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார். அதிலும் காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சக நடிகர்களிடமும் பேசி நடிக்க வேண்டும். வண்டியை ஓட்டும் போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் அவர்கள் காரில் அமர்ந்து பயணிக்கும் போது காட்சிக் கோணங்களுக்கு ஏற்ப நடிக்கவும் வேண்டும். இவை அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

ரசிகர்களைப் பயமுறுத்த வேண்டும் என்று நினைத்து காட்சிகளை உருவாக்குவது என்பது எளிதானது. ஆனால் கதையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் பயத்தை அவருடைய நடிப்பின் மூலமாக பார்வையாளர்களுக்குக் கடத்துவது என்பது பெரும் சவாலானது. இது இயக்குநர்களின் கையில் இல்லை. நட்சத்திர நடிகர்களின் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளையும் அற்புதமாக உள்வாங்கி, வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

 

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசை மூலம் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களின் முழு திறமையையும் இந்தப் படத்திற்காக வழங்கியிருக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்