Skip to main content

அமெரிக்க ராணுவ வீரருக்காக கலங்கிய ஜி.வி.பிரகாஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
israel palestine issue USA army GV Prakash condolence

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. 

ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போது, பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணையக் கைதிகளில் 31 போர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே  நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கடந்த 25 ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்காவின் விமானப் படை வீரரான ஆரோன் புஷ்னெல்(25), ‘பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும்..’ என்று முழக்கமிட்டுக்கொண்டே தன்னுடைய உடலில் தீ வைத்துக்கொண்டார். கடைசி வரை தீப்பற்றி எரிந்த நிலையிலும், அந்த இடத்திலிருந்து நகராமல் சரிந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ், ஆரோன் புஷ்னெல் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி. தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டுள்ளார். திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார் ஜி.வி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்