தயாரிப்பாளர் கலைமாமணி ஐசரி கணேஷ், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்ஸ் மூலம் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிபெறச் செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல திறமையாளர்களின் திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன. இந்நிலையில் திரைத்துறையில் தங்கள் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் விதமாக 'வேல்ஸ் சிக்னேச்சர் (Vels Signature)' எனும் புதிய தளமொன்றை ஐசரி கணேஷ் நிறுவியுள்ளார். இந்நிறுவனம் 'கான்சப்ட் நோட் (Conzept Note)' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.. திரைத்துறையில் குறும்படம், சுயாதீன இசை ஆல்பம் போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும் புதிய திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தளமானது செயல்படவுள்ளது.
இது குறித்து 'கான்சப்ட் நோட்' சார்பாக ஷ்யாம் ஜாக் கூறிகையில், "தென்னிந்திய திரைத்துறையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனத்துடன், திரைத்துறையில் ஆர்வத்துடன் சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் விதமான இந்த புதிய பயணத்தில் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படங்களை போலவே குறும்படங்கள், இசை ஆல்பங்கள், டாக்குமெண்ட்ரி படங்கள் மக்களை சென்றடைவதில் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் குறும்படங்கள் முதல் இளம் திறமையாளர்களின் படைப்புகளை பெரும் மக்கள் திரளிடம் எடுத்து செல்லும் பணியினை 'வேல்ஸ் சிக்னேச்சர்' நிறுவனம் செய்யவுள்ளது" எனக் கூறினார்.