Skip to main content

கமல்ஹாசன் படத்தின் மறுவெளியீட்டுக்கு இடைக்காலத் தடை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Interim ban on re release of Guna film

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. 

மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இளையராஜா இசையில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன்,  ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்திருந்தனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற, ‘கண்மணி அன்போடு காதலன்’ இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தை மறுவெளியீடு (ரீ ரிலீஸ்) செய்ய படத்தயாரிப்பு நிறுவனமான ப்ரெமீடு மற்றும் எவர்கீரின் ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் பதிப்புரிமையை தான் வாங்கியுள்ளதாக கூறி இப்படத்தை மறுவெளியீடு செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கன்ஷியாம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தின் மறுவெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்