![Indian student who sent threat mail to salman khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/S4YmcVvqPQ-5tvwU0Ff8boycaY9E9N8qPVy25VWMeYo/1683723678/sites/default/files/inline-images/42_57.jpg)
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்து வரும் சல்மான் கான், அவ்வப்போது கொலை மிரட்டலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் பஞ்சாபி பாப் பாடகரான சித்து மூஸ் கொலை போல் கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள் எனக் கடிதம் மூலம் மிரட்டல் வந்தது. கடந்த மாதம் இ-மெயில் மூலமாக கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து மும்பை போலீசார் சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதற்கு பின்னால் பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கருதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் தொலைப்பேசி மூலமாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த நிலையில் அது 16 வயது சிறுவன் ஒருவன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் மீண்டும் தற்போது சல்மான் கானுக்கு இ- மெயில் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவிலிருக்கும் கோல்டி பிராரை நடிகர் சல்மான் கான் சந்தித்து, பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையேல் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்தியாவை சேர்ந்த ஒரு இளைஞர் என்று தெரிய வந்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மருத்துவப் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். இப்போது அவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் அவரது படிப்பு முடிவடைவதால் அவரை இந்தியா கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.