உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விருதுக்கான இறுதி பட்டியல் நேற்று வெளியான நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படம் இதில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஆவணப்படங்களுக்கான இறுதி பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற ஆவணப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒரு ஆவணப்படம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
ரின்டு தாமஸ் மற்றும் சுஷ்மிதா கோஷ் இருவரும் இணைந்து 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற ஆவணப் படத்தை இயக்கியிருந்தனர். பட்டியலின பெண் பத்திரிகையாளரை பற்றி ஆவணப்படமாக வெளியான இப்படம் உலக முழுவதிலும் இருந்து ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்ட 139 ஆவணப் படங்களிலிருந்து இறுதி 5 படங்களில் ஒரு படமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஜெய் பீம்' படம் இடம் பெறாமல் போனது, ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவணப்படம் ரசிகர்களுக்கு இன்னொரு நம்பிக்கையை தந்திருக்கிறது.