சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த சனிக்கிழமை (20.11.2021) அன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்த இவ்விழா, வரும் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகர் சல்மான் கான், நடிகை சமந்தா உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், நடனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என சினிமாத் துறையில் பன்முகத் திறமைகொண்ட நடிகை ஹேமமாலினிக்கு சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் இருவரும் வழங்க ஹேமமாலினி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களான இஸ்த்வான் சாபோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆகியோருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
இந்த திரைப்பட விழாவில் ஓடிடி தளத்தில் வெளியான படங்களும் திரையிடப்படவுள்ளன. அந்த வகையில், தமிழில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ திரைப்படமும், இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் வெளியான 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.