கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் சில நிபந்தனைகளுடன் தொடங்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கிடையே கிரேன் விபத்து உட்பட பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தபின் தொடங்கும் என லைகா நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கி, இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் 'இந்தியன் 2' படத்துக்காக இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே சுமார் ஐந்து மணிநேரம் உள்ளதால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாமா என்று பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், கரோனா ஊரடங்கு முடிவதற்குள் படத்தின் பின்னணி வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு, பிறகு கரோனா ஊரடங்கு தளர்ந்தவுடன் தமிழக அரசிடம் படப்பிடிப்பிற்கான அனுமதி கிடைத்தவுடன், 'இந்தியன் 2' ஷூட்டிங்கை உடனே தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதற்காக விபத்து ஏற்பட்ட ஈ.வி.பி. தளத்தில் இருந்து படப்பிடிப்பு அரங்கை பல்லாவரம் பின்னி மில்லுக்கு மாற்றிய படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பு அங்கு நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.