லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. இதனிடையே, அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவந்த கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் ஷங்கரும் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு யூகங்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்ற நிலையில்,
“'இந்தியன் 2’ படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் ப்ரொடக்சன் பிரச்சனைகள் கூடிய விரைவில் சரி செய்யப்படும். இதையடுத்து, ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ பட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். இதுநாள்வரை இருந்த 'இந்தியன் 2' படப் பிரச்சனைக்கு இந்தப் பேட்டி மூலம் கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கிடையே, ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு எந்தப் படத்தையும் இயக்கக்கூடாது என லைகா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.