கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ராயல்டி தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடகர் எஸ்.பி.பிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இவ்விரு ஜாம்பாவான்களின் ரசிகர்களுக்கும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பேச்சு மோதலுக்கு பின்னர் இளையராஜாவும் எஸ்.பி.பியும் வேறு எந்த மேடையிலும் ஒரு சேர கலந்துகொள்ளவில்லை. ஆனால், எஸ்.பி.பி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே இளையராஜாவைப் பற்றி உயர்வாகப் பேசிவந்தார்.
ஜூன் 2ஆம் தேதி இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். ராயல்டி பிரச்சினைக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இது அமையவுள்ளது.பலரும் இந்த நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எஸ்.பி.பி உடனான பிரச்சனை குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இளையராஜா, “எனக்கும் எஸ்.பி.பி.க்குமான பிரச்சினை வேறு. எங்களுக்குள்ளான தவறான புரிதல், ராயல்டிக்கான தொகை தரப்படாததால் ஏற்பட்டது. இப்போது அவர் ராயல்டி தருகிறார். பிரச்சினை இல்லை. எனது பாடல்களுக்கான உரிமை என்னிடம் உள்ளது என நான் நினைக்கிறேன். இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ அந்த உரிமை இல்லை. ஏனென்றால். நான் தான் பாடலை உருவாக்குகிறேன். அவர்களல்ல” என்று கூறியுள்ளார்.