வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (08.03.2023) நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
இளையராஜா பேசுகையில், "இந்த படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கின்ற படமாக இருக்கும். வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையே. ஒரு கடலில் எப்படி அலை வருகிறது. ஆனால், ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அலையே. அதை போல் வெற்றிமாறன் வெவ்வேறு திரைக்கதைகளை அமைக்கிறார். அது எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. திரையுலகத்திற்கு இவர் முக்கியமான இயக்குநர். நான் 1500 படங்கள் பணியாற்றிய பிறகு இதைச் சொல்கிறேன் என்றால், அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிமாறன் திரையுலகிற்கு கிடைத்த ஒரு நல்ல இயக்குநர். இந்த படத்தில் இதுவரை நீங்க கேட்காத இசையை கேட்பீர்கள்" எனப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மேடைக்கு கீழே இருந்த ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதனால் கோபமடைந்த இளையராஜா, "இந்த மாதிரி சத்தம் போட்டீங்கன்னா நான் என்ன பேசுறது. கத்தாத.. மைக்கை கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்பேன்" என்றார். பின்பு அங்கிருந்தவர்கள் அமைதியாகிவிட்டனர். தொடர்ந்து பேசிய இளையராஜா, படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி பாடலைப் பாடி விடைபெற்றார்.