இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் நிதி தவறாகக் கையாளப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, துணைத் தலைவர் செங்குட்டுவேல் ஆஜராகினார். அவர் சார்பில் வழக்கிறஞர்கள் கிருஷ்ணா ரவிந்திரன், சார்லஸ் டார்ன் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறுகையில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலும், அடிப்படை ஆதாரங்கள் இன்றி உத்தேசமாக கூறப்பட்டுள்ளவை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், விழாவுக்கான விவரங்கள், ஒப்பந்த விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடந்த நிதியாண்டில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறோம் என்றனர். மேலும், வரும் மார்ச் 3ஆம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான விரிவான கணக்குகளையும் தணிக்கையாளரிடம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் ஒத்திவைத்தார்.