கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா எஸ்.பி.பிக்காக உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
"பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா!" என உருக்கமாக பேசியுள்ளார்.