சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய இளையராஜா, “எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. நான் முதன் முதலில் ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்த படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருது. முதல் ரீல் ஓடுது... கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு இசையமைத்தேன். அதனால் முதல் படத்திலே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன். நான் சிவன் பக்தன். ஆனால் இதற்கு எதிரி அல்ல. எங்க அப்பா ராமசாமி. எங்க அம்மா சின்னதாய் அம்மாள். அண்ணன் பாவலி வரதராஜன். அக்கா கமலம். இன்னோரு அக்கா பத்மாவதி. எனக்கு எங்க அப்ப வைச்ச பேர் ஞானதேசியன்.
ஆனால் ஸ்கூலில் சின்னதாக இருக்க வேண்டும் என ராஜய்யா என மாற்றினார். அது ராஜாவாக மாறி பின்பு இளையராஜாவாக மாறியது. திவ்யபிரபஞ்சத்தையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான நேரத்தில் அதை வெளியிட காத்திருக்கிறேன். மாதம் 30 நட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது. இரவு பகலாக வேலை செய்கிறார்கள். 1 பாட்டு பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள் எல்லாம் இருக்காங்க. அவர்களை குறை சொல்வது என்பது இல்லை. அவர்களுக்கு வரவில்லை.
நான் கர்னாடிக் சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவன் என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது கேள்விகுறிதான். ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக்கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. அதை சின்ன வயதிலே தூக்கி எறிந்துவிட்டேன். கச்சேரி நடக்கையில், நான் சின்ன பையனாக இருந்த போது, ஹார்மோனியம் வாசிப்பேன். ஜனங்க கைதட்றாங்க. அதை கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகிட்டே போனது. அது ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக... கர்வமும் ஜாஸ்தியாகிட்டே போனது.
ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டிற்காகவா, மியூசிக்கிற்காகவா, இல்லை நாம வாசிக்கிற திறைமைக்காகவா என மனசுக்குள் ஒரு கேள்வி. அப்புறம் பாட்டுக்கு தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகுது. அதன் பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிபோய் விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் என்னை சிந்திக்க வைக்காது. மூன்று தினங்களில் மூன்று படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி” என்றார்.