சென்னையில் நடைபெற்ற 'லோக்கல் சரக்கு' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள்ஸ் வெளியிட்டு விழாவில் நடிகர் சாம்ஸ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சாம்ஸ், "வரலாறு எல்லாமே கொஞ்சம் பொய்யாக தான் இருக்கிறது போன்ற அபிப்பிராயம் என்னுடையது. ரொம்ப உண்மைகளைத் தேடி செல்ல வேண்டியது உள்ளது. பழமையைத் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டாம். இனி அடுத்து நடக்கவுள்ள விஷயங்கள் நல்ல படியாக இருந்துவிட்டு போனால் போதும். நான் அரசுப் பள்ளியில் படித்தேன்; நான் படிக்கும்போது, ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது. அதற்கு மார்க்கும் இருந்தது.
ஆங்கிலம் ஏன் படிக்க வேண்டும்? என் மூதாதையர்கள் தமிழில் படித்து நன்றாகத்தானே இருந்தார்கள். ஆங்கிலம் இல்லாத, தெரியாத நாடுகள் நம்மை விட வளர்ச்சியில் உள்ளனர். மறைமுகமாக தமிழில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழியில் அதை திணித்து வைத்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை ஆங்கில திணிப்பும் தப்புதான், ஹிந்தி திணிப்பும் தப்புதான். என் தாய்மொழியில் மட்டும் நான் படித்திருந்தால் என்னுடைய படிக்கிற காலத்தில் நான் கூனிக் குறுகாமல் இருந்திருப்பேன்.
ஆங்கிலம் தெரிந்தது என்றால் வெளிநாடுகளுக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள். அவரவர் தாய்மொழியில் படித்து, நன்றாக இருக்கக் கூடிய நாடுகளும் இருக்கிறது. தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து, தமிழுக்கு முன்னுரிமைக் கொடுத்து, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கொண்டு வந்து விட்டால், தானாகவே தமிழ் வளர்ந்து விடும். நமக்கு வேண்டுமென்றால் சமஸ்கிருதம் கூட கற்றுக்கொள்ளலாம். எனினும், திணிப்பது தவறு" எனத் தெரிவித்தார்.