53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழா வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், திரைப் பிரபலங்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படவுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் 'தி மாஸ்டர் ரைட்டிங் ப்ராசெஸ்' (The Master's Writing Process) என்ற தலைப்பில் எழுத்து தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இயக்குநர் ராஜமௌலியின் தந்தையும் கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் நடத்தினார். அதில் அவர் திரைக்கதை எழுதுவது பற்றியும் அதற்கான உதவிக் குறிப்புகளையும் குறிப்பிட்டார். அப்போது அவர் பேசுகையில், "எழுத்தாளர் ஆவதற்கு முன்பு விவசாயம் உட்பட வாழ்வாதாரத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். எழுத்து என் வாழ்க்கையில் மிக தாமதமாகத்தான் வந்தது.
நான் கதைகளை எழுதுவதில்லை. திருடுகிறேன். உங்களைச் சுற்றி கதைகள் இருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்கள் உட்பட பல இடங்களில் இருக்கிறது கதைகள். அதைத் தனித்துவமான முறையில் நீங்கள் பிரதிபலிக்க வேண்டும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். உங்கள் கதைகளுக்கு நீங்கள் சிறந்த விமர்சகர்களாக இருங்கள். அது உங்களை உயரத்துக்குக் கொண்டு செல்லும்" எனப் பேசியுள்ளார். விஜயேந்திர பிரசாத் 'மாவீரன்', 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட பல படங்களுக்குக் கதைகளை எழுதியுள்ளார். இது போக சில படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.