கடந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'டாணாக்காரன்'. காவல் துறையில் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களை பேசும் படமாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'பாவெல் நவகீதன்' அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தின் கதையை முதல் முறை நீங்கள் கேட்டவுடன் காவல்துறை பயிற்சியில் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியந்த காட்சி எது என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு...
" 'டாணாக்காரன்' படப்பிடிப்பு எல்லா நாளும் அப்படி தான் இருக்கும். இப்படியெல்லாம் இருக்குமா, இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்று ஒவ்வொரு நாளுமே யோசிப்பேன். இயக்குநர் தமிழ் சார் ஏற்கனவே காவல் துறையில் பணியாற்றியவர். அதிலிருந்து அவர் வந்ததினால் இப்படியெல்லாம் நடந்திருக்கா என சந்தேகம் இல்லாமல், இப்படி எல்லாம் நடந்திருக்கு என்று ஆச்சரியப்பட்டேன். அவர் நடக்காத ஒன்றை படமாக்கவில்லை என்று தெளிவாக தெரியும். படப்பிடிப்பின் போது இன்னும் நிறைய நிகழ்வுகளை தமிழ் சார் சொல்லுவார். அதை கேட்கும் போது இந்த நிகழ்வுகளை எல்லாம் ஏன் படத்தில் வைக்கவில்லை என்று கேட்போம். இது சம்பந்தமாக பல கதைகளை சுவாரசியமாக சொல்லுவார். இதை எல்லாம் கதையில் வையுங்கள் என்று கேட்கும் போது, வைக்க முடியாது நண்பா என சொல்லுவார். அதை மக்களுக்காக சொல்லுங்கள் என்று கேட்டபோது, அதை அவரே சொல்ல முடியாது என்ற காரணத்தால்தான் படத்தில் சேர்க்கவில்லை. நானும் அதை பொதுவெளியில் சொல்ல முடியாது" என்று கூறினார்.
இதனை தொடர்ந்து 'ஜெய் பீம்' படத்தில் தமிழ் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து உங்களிடம் ஏதேனும் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்விக்கு பாவெல் நவகீதன் கூறியது, "டாணாக்காரன் பட பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. 'அசுரன்' படத்தில் மட்டும் நடித்திருந்தார். இப்பவும் நடிப்பை விட இயக்கத்தில் தான் அவருக்கு ஆர்வம் அதிகம். 'ஜெய் பீம்' படம் வெளியாவதற்கு முன்பே 'டாணாக்காரன்' படத்தின் பணிகள் முடிந்துவிட்டன. அதனால் அதை பற்றி நாங்கள் அப்போது பேசவில்லை. 'ஜெய் பீம்' வெளியான பிறகு அவரிடம் பேசினேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நமக்கு பிடித்த படத்தில் நமக்கு பிடித்த நடிகர் இருக்கும்போது கண்டிப்பாக அவரை அழைத்து பாராட்டுவோம். தமிழ் சார் நிஜத்திலும் எனக்கு தெரியும். 'ஜெய் பீம்' படத்தில் பார்த்தது போல் நிஜத்தில் அவர் அப்படி கிடையாது, மிகவும் எமோஷனல் ஆன மனிதர். அப்படிப்பட்ட மனிதரை ஒரு கொடூரமான வில்லனாக காண்பித்துள்ளார்கள். அதை நினைக்கும் போது, பாவம் இந்த வில்லனாக நடிப்பவர்களே இப்படித்தான். அவர்களுக்கு வேறொரு முகம் இருக்கும் ஆனால் திரையில் நேரெதிராக தோன்றுவார்கள். நான் பார்த்த நிறைய வில்லன்கள் நிஜத்தில் அப்படித்தான் இருக்கிறார்கள் நான் உட்பட" என்று கூறினார்.