தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 51,087 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். காங்கிரஸ் மயூரா எஸ் ஜெயக்குமார் 41,669 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.