"என் அசிஸ்டன்ட் ஒருத்தன் இருக்கான், அடுத்த வருஷம் படம் பண்ணிருவான். அவன் எப்படி படம் எடுக்குறான் பாருங்க..." - இது இயக்குனர் ஷங்கர் பல ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இயக்குனர் அட்லி, தனது முதல் படமான 'ராஜா ராணி' படத்தை இயக்கும் முன்பு, ஒரு பேட்டியில் தனது சிஷ்யர்கள் குறித்துப் பேசும்போது பெருமையுடன் கூறியது. அப்போது ஷங்கரிடம் கேட்கப்பட்ட கேள்வி, ஏற்கனவே இயக்குனர்களாயிருந்த அவரது சீடர்கள் குறித்ததே. ஆனால், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் வரிசையில் அப்போது படம் இயக்கியிராத அட்லியை குறிப்பிட்டு சொன்னார் ஷங்கர். 'எந்திரன்', 'நண்பன்', உள்ளிட்ட படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லி தனது குருவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் நிகழ்வு இது.
அப்படிப்பட்ட நல்ல சீடரான அட்லி, ஷங்கரிடமிருந்து வெளியே வந்து இயக்கிய முதல் படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் நடித்த இந்தப் படம் பெரிய வெற்றிப்படமானது. அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அங்கம் வகித்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாக வந்த இந்தப் படம் பல விதங்களிலும் ரசிகர்களை கவர்ந்தது. இன்றும் அப்படத்தின் பல வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது, அந்தப் படத்தின் காமெடி ரசிக்கப்படுகிறது. இத்தனை இருந்தும் அந்தப் படம் ஷங்கர் கூறிய அளவுக்கு அட்லியை ஒரு மிகச் சிறந்த இயக்குனராகக் காட்டவில்லை. மேலும், அந்தப் படத்தின் கதை இயக்குனர் மணிரத்னத்தின் 'மௌன ராகம்' திரைப்படத்தின் கதை போலவே இருந்தது என்ற விமர்சனமும் இருந்தது. "வெற்றி பெற்ற ஒரு விஷயத்தைப் பற்றி விமர்சிப்பது வீண்" என்று இயக்குனர் பாலுமகேந்திரா கூறியதைப் போல, 'ராஜா ராணி' பெற்ற வெற்றி அட்லிக்கு இரண்டாவது படத்தையே விஜய் படமாகப் பெற்றுக்கொடுத்தது.
அட்லி இயக்கும் விஜய் படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. டைட்டிலில் இருந்து விஜய் எத்தனை பாத்திரங்களில் வருகிறார் என்பது வரை சஸ்பென்ஸ் வைத்து வந்த 'தெறி' படத்தில் ஒரே பாத்திரம், இரு தோற்றம் என வந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் விஜய். காலம் காலமாக பல படங்களில் வந்த 'பாட்ஷா' டெம்ப்லேட் கதை என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது 'தெறி'. 'புலி' படம் அடைந்த படுதோல்வியில் இருந்து விஜய்யை மீட்டெடுத்தது 'தெறி'. இன்றும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் மாஸ் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'தெறி'. 'ஜோசஃப்' , 'விஜய்' என்று விஜய்யின் உண்மையான பெயரின் இரு பகுதிகளையும் அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார் அட்லி. அத்தனை பாசிட்டிவ் அம்சங்களையும் தாண்டி, அந்தப் படம் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தின் கதையைக் கொண்டது என்ற விமர்சனமும் இருந்தது. ஆனால், அட்லி இந்த விமர்சனங்கள் குறித்து சற்றும் கவலைப்படுபவர் அல்ல. படம் பார்க்கும் நேரத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தினால் போதும் என்ற கொள்கை உடையவர்.
'தெறி'க்குப் பிறகு விஜய் நடித்த 'பைரவா' எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மீண்டும் அதிக இடைவெளி விடாமல் இணைந்தது விஜய் - அட்லி கூட்டணி. 'மெர்சல்' படத்தின் அறிவிப்பும் போஸ்டர்களும் மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தன. இந்த முறை ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்ற தகவலால் இன்னும் அதிக எதிர்பார்ப்பு உண்டானது. அதே நேரம் ரசிகர்களுக்கு ஒரு பயமும் இருந்தது. அதற்கு முன்பு ரஹ்மான் இசையமைத்த விஜய் படங்களான 'உதயா', 'அழகிய தமிழ்மகன்' படங்களின் ரிசல்ட் அப்படி. அந்த பயம், பாடல்கள் வெளியான பின்பு காணாமல் போனது. தமிழ் மாஸ் நடிகர்களின் ரசிகர்களுக்கு, தங்கள் நாயகர்களை சில தோற்றங்களில், கெட்-அப்களில் பார்க்கவேண்டுமென்ற ஆசை இருக்கும். அதில் முக்கியமானவை போலீஸ் கெட்-அப் மற்றும் வேட்டி - சட்டை அணிந்த கிராமத்து பாத்திரம் ஆகிய இரண்டு. எதிரில் அஜித் ரசிகர்கள் தங்கள் 'தல'யை 'என்னை அறிந்தால்', 'வீரம்' ஆகிய படங்களில் இந்த இரண்டு கெட்-அப்களில் பார்த்து ரசித்துவிட்டனர். விஜய், 'போக்கிரி' படத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அப்போது இருந்த உடல்வாகு காரணமாக அது ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அட்லி, தனது 'தெறி' படத்தில் விஜய்யை ஸ்மார்ட் போலீசாகக் காட்டி விஜய் ரசிகர்களை மகிழ்வித்தார். இப்போது 'மெர்சல்' படத்தில் வேட்டி சட்டை, முறுக்கு மீசை என விஜய்யை கெத்தான கிராமத்துத் தோற்றத்தில் காட்டி ரசிகர்களை இன்னும் அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.
அட்லியின் இந்தப் படத்தில் அரசியல் ஆசை இருக்கும் விஜய்க்கும் அவரை தலைவனாகப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கும் கிடைத்த உச்ச மகிழ்ச்சி 'ஆளப் போறான் தமிழன்' பாடல். இன்றும் விஜயகாந்த்தின் அரசியல் கூட்டங்களில், அவரது கட்சி நிகழ்வுகளில் ஒலிக்கும் பாடல் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற 'பொன்மன செல்வன்' படப் பாடல். ரஜினிக்கு 'எஜமான்' உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் இருக்கின்றன. கமலுக்கு 'யார் என்று தெரிகிறதா' ஒன்றே போதும். அந்த வரிசையில், ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் விஜய்க்கு பயன்படப்போகும் பாடல் 'ஆளப் போறான் தமிழன்'. அந்தப் பாடலை தந்த அட்லி விஜய்க்கு மிக முக்கியமான இயக்குனர். 'மெர்சல்' படத்தின் மீதும் கதை சர்ச்சை உண்டு. 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்' படங்களின் கதை என்ற பேச்சு இன்னும் இருக்கிறது. அது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரச்னையும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கமலை அழைத்து 'மெர்சல்' படத்தை போட்டுக் காண்பித்தது அட்லி அண்ட் கோ.,
சுமாரான வெற்றி பெற இருந்த 'மெர்சல்' பாஜக உபயத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் 'பிகில்' கூட்டணி அமைத்துள்ளனர் விஜய், அட்லி இருவரும். 'மெர்சல்' படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று ஒரு பேச்சு, கதை பிரச்னை, 'பிகில்' கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் தொடுத்த வழக்கு... இப்படி எதுவும் இந்தக் கூட்டணியை சலனப்படுத்தவில்லை. ரசிகர்களும் விஜய்யும் குஷியுடன் ரிலீசுக்குக் காத்திருக்கின்றனர். விஜய்க்குத் தேவையானதும் ரசிகர்களுக்குத் தேவையானதும் கண்டிப்பாகப் படத்தில் இருக்கும். 'மெர்சல்'லில் கிராமத்து விஜய்யை காட்டிய அட்லி இந்த முறை 'புள்ளிங்கோ'வாக லோக்கல் டானாக விஜய்யை காட்டி இன்னொரு தளத்துக்கு விஜய்யை கொண்டு செல்கிறார். இவர்கள் இருவருக்குமிடையிலான நெருக்கம் 'பிகில்' பாடல் வெளியீட்டு விழாவில் தெரிந்தது. அட்லியின் பேச்சு விஜய் போலவே இருந்தது. தனது அண்ணன் என்றே குறிப்பிட்டார். இப்படி பல வகைகளிலும் விஜய்க்கு அட்லி மிக மிக முக்கியமானவர்.