பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து 1982-ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' படத்தின் மூலம் இயக்குநரானவர் மனோபாலா. தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் இன்று தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் ரஜினியை வைத்து 'ஊர்காவலன்' எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். 2014-ல் வெளியான 'சதுரங்க வேட்டை' படத்தை முதல் முறையாக தயாரித்திருந்தார். பிறகு நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக திகழும் மனோபாலாவிற்கு 'டாக்டர்' பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம். மேலும், குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில், இத்தனை வருடங்களாக மனோபாலா திரைத்துறையில் பணியாற்றிய சேவையை பாராட்டி 'வாழ்நாள் சாதனையாளர் விருதும்' வழங்கியுள்ளது. அவரை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதனை பாராட்டி திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.