ரெவனன்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வாங்கியவர் ஹாலிவுட் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ. இவர் அந்த விருதை வாங்கியபின் க்ளைமேட் சேஞ்ச் என்பது உண்மைதான். அதனால் இனியாவது இயற்கையை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் என்று ஆஸ்கர் மேடையை க்ளைமேட் சேஞ்சிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்திக்கொண்டார். இதன்பின் இவர் பல உதவிகளையும், நிதிகளையும் இயற்கையை காப்பாற்ற செய்து வருகிறார்.
சமீபத்தில்கூட தொடர்ந்து காட்டுத் தீயால் கருகி வந்த அமேசான் காட்டிற்காக முதன் முதலில் குரல் கொடுத்த பிரபலங்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாது இனி அமேசான் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நிதி உதவி செய்து ஒரு அமைப்பை உருவாக்க உதவி செய்துள்ளார். சென்னை நகரத்தில் நிலத்தடி நீர் இன்றி தவித்து வந்தபோது அதை பற்றியும் பதிவு ஒன்றைபோட்டு உலகு அறிய செய்தவர் லியோ.
இந்த நிலையில் காவிரி நதியை காப்பாற்றி புத்துயிர் அளிக்கும் வகையில் ஜக்கி வாசுதேவ் தொடங்கி இருக்கும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு நடிகர் லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து லியோ சமூக வலைதளத்தில், “இந்திய நதிகள் கடுமையாக அருகி வரும் வேளையில் அதன் பல சிறு நதிகள் மறைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்க ‘காவிரி கூக்குரல்’ இயக்கம் தொடங்கி இருக்கும் ஜக்கி வாசுதேவுடன் நாம் இணைவோம்” என்று தெரிவித்துள்ளார்.