Skip to main content

"எனக்கு 90'ஸ் கிட்ஸ் சக்திமான் எப்போதும் ஸ்பெஷல்" - நினைவுகளை பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

hip hop aadhi speech at veeran press meet function

 

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரன்'. கதாநாயகியாக அதிரா ராஜ் நடிக்க வில்லனாக வினய் ராய் நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை பணிகளை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பேசினர். 

 

நடிகர் வினய், "கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு சத்யஜோதி தியாகராஜன் சார் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கிறேன். இந்த படத்தின் இயக்குநர் சரவன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டபோது நான் உடனே சம்மதித்து விட்டேன். ஏனென்றால், சூப்பர் ஹீரோ படம் என்றால் அதை எப்படி அவர்கள் நம்பும்படி தரப் போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் உங்களை போல எனக்கும் இருந்தது. அடுத்து ஆதி.. இனிமையாக பழகக் கூடியவர். நல்ல நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்டவர். ஒரு படக்குழு ஒற்றுமையாக இருக்கும் பொழுதே அந்த படம் வெற்றியடைந்து விடும் என்று நான் நம்புவேன். அது 'வீரன்' படத்தில் உள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் தங்களுடைய சிறந்த பணியை கொடுத்துள்ளனர்" என்றார்.

 

நடிகர் ஆதி பேசியதாவது, "சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களை போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். தியாகராஜன் சாருடைய இரண்டாவது மகன் அர்ஜூன் எனக்கு நல்ல நண்பர். அவர் 'நட்பே துணை' சமயத்தில் இருந்து அடுத்தடுத்து எங்களுக்கு படம் செய்து தர வேண்டும் என்று கேட்டார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை மிகப் பெரியது. அவருக்கும், சந்திக்கும் போதெல்லாம் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் தியாகராஜன் சாருக்கும் நன்றி.

 

அடுத்து இயக்குநர் சரவன். எனக்கு 'இன்று நேற்று நாளை' இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகம். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில் தான் ஆக்‌ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தினோம். கிட்டத்தட்ட இந்த பயணத்தில் ஆறு மாதங்கள் என்னுடனே அவரும் உடன் இருந்தார். வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு சரவனும் ஒருவர். இதற்கு அடுத்தும் தொடர்ந்து வேலை செய்வோம் என்று காத்திருக்கிறேன்.

 

இந்தப் படத்தின் சூப்பர் வில்லன் வினய் அண்ணன். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. இன்று தமிழ் சினிமாவில் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துக் கொண்டிருக்கும் காளி அண்ணனும், முனீஸ்காந்த் அண்ணனும் இந்த படத்தின் நகைச்சுவைக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறுமேயானல், அவர்களுடைய பங்கும் மிகப் பெரியது. ஆதிரா கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார். 

 

இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. மண் சார்ந்த ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற உடைகளை கீர்த்தி நிறைய டிரையல் செய்து எடுத்து வந்தார். இதுபோல படத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறந்த பணியை கொடுத்துள்ளனர். என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் எனக்கு 90'ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும் நாஸ்டலஜியா. இப்போது, ஸ்கூல் திறப்பு தள்ளிப் போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த 'வீரன்' படத்தை கொண்டு வந்து காண்பிக்கலாம். அவர்களுக்கு இன்னும் ஒரு 10 வருடம் கழித்து 'வீரன்' ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும். படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்று கூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்கள் பரிசோதித்து இருக்கிறோம். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்