கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர் வகையறா படம் தொடர்பாக விமலுக்கு, தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. சிங்காரவேலன் தனது பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு இந்த புகாரின் அடிப்படையில் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், கோபி ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோபி இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது" என உத்தரவிட்டுள்ளார்.