ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அந்தாலஜி படமாக உருவான 'சில்லுக்கருப்பட்டி' படத்தில் வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் இன்று காலை மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா ஷமீம் இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"ஸ்ரீராம் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிக வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். அவரது பால்கனியிலிருந்து எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்துள்ளார். அவரது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். தயாரிப்பில் இருக்கும் சில பெரிய படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னுடன் பகிர்ந்தார்.
ஸ்ரீராம் சார், உங்கள் ஆர்வமும், வசீகரமும் என்றும் எங்கள் மனதில் இருக்கும். உயிர்ப்புடன் இருந்த மனிதர் நீங்கள். இப்போது இல்லை என்பதை நம்பமுடியவில்லை. நீங்கள் அவ்வளவு அன்போடு 'என் டைரக்டர் மேம்' என்று என்னை அழைத்தது, உங்கள் காலை நேர ஓவியங்களை, நீங்கள் நடித்து வந்த பெரிய படங்களின் புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்தது என எதுவும் மறக்காது. " 'சில்லுக் கருப்பட்டி' வெளியாகி ஒரு வருடம் ஆனதைக் கொண்டாட நம் குழுவை இரவு விருந்துக்கு அழைத்ததற்கு நன்றி. நான் அதற்கான செலவைப் பகிர்ந்துகொள்கிறேன்" என்று சொன்னபோது, இது என் விருந்து, அடுத்தமுறை நீங்கள் கொடுங்கள் என்று சொன்னீர்கள்.
ஆனால், அடுத்த முறை என்பது கிடையாது என்பதை உணரும்போது நொறுங்கிப் போகிறேன். வாழ்க்கை மிகவும் குரூரமானது. என் அன்பும், மரியாதையும் சார். நீங்கள் எங்கிருந்தாலும், கண்டிப்பாக அங்கிருந்து, உங்கள் இணையற்ற உற்சாகத்துடன் எங்களைப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் வாழ்க்கையை நேசித்தவர். நான் என்றுமே உங்களை மனதில் வைத்திருப்பேன். நீங்கள் வாழ்க்கையை எப்படி நேசித்தீர்களோ அப்படி நேசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். ‘டர்டல்ஸ்’ கதையில் நீங்கள் சொன்ன வசனம், 'என்னால் இன்னும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்பது. படப்பிடிப்பில் நீங்கள் இந்த வசனத்தைப் பேசியது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.