ஹலிதா ஷமீம், தனித்துவமான படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார். 2014-ஆம் ஆண்டு வெளியான 'பூவரசம் பீப்பீ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர் 'சில்லுக்கருப்பட்டி' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஏலே' படம் மற்றும் இந்த ஆண்டு வெளியான 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜி சீரிஸில் 'லோனர்ஸ்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் 'மின்மினி' படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் 'மின்மினி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பைப் படக்குழு துவங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் குழந்தைப் பருவ பகுதிகளை 2015-ஆம் ஆண்டு படமாக்கி முடித்துவிட்டார் ஹலிதா ஷமீம். இதனை அடுத்து இவர்களை இளம் வயதினராகக் காண 7 வருடங்கள் இடைவெளிவிட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஹலிதா. இவரது இந்த புதிய முயற்சி தமிழ் திரையுலகைத் தாண்டி மற்ற திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.