வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்’ திரைப்படம், வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படக்குழுவினருடனான பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ஜி.வி. பிரகாஷ், "15 ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரசாத் லேப்பில்தான் ‘வெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது எனக்கு 17 வயதுதான். ரொம்ப சின்னப் பையனாக உட்கார்ந்து எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது என்று பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் சின்னப் பையன் என்று கூறி நிறைய பேர் என்னை வேண்டாம் என்றார்கள். ஆனால், எனக்கு ஜி.வி. பிரகாஷ்தான் வேண்டும் என்று அடம்பித்து எனக்கான முதல் வாய்ப்பை வசந்தபாலன் சார் வாங்கிக்கொடுத்தார். நான் அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவிலிருந்து ஈரானிய படங்களோடு போட்டி போடக்கூடியவர் வசந்தபாலன் சார். இந்தியாவின் பெருமை அவர். ‘ஜெயில்’ படத்தில் முக்கியமான அரசியல் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது உலக அளவில் முக்கியமான கருத்து. ‘ஜெய் பீம்’ திரைப்படம் எப்படி முக்கியமான ஒரு கருத்தைச் சொன்னதோ, அதேபோல இந்தப் படமும் சொல்லும். படத்தைப் பார்த்த பிறகு எனக்குப் பெரும் நம்பிக்கை வந்துள்ளது. மூன்று ஆண்டுகள் நிறைய வலிகளை எதிர்கொண்டோம். வசந்தபாலன் சாருக்கு நிறைய உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன. அதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருமே படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். படம் எடுத்த இடத்திலேயே சென்று வாழ்ந்துள்ளோம். இடம்மாறுதல் எவ்வளவு பிரச்சனைகளைப் பல குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளது என்பதை இந்தப் படம் பதிவு செய்துள்ளது" எனக் கூறினார்.