ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாவதாகவும் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார். ஏற்கனவே இசையமைப்பாளராக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது இந்தியில் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி, சூரரைப் போற்று ரீமெக் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அனுராக் கஷ்யப், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.