தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கூலித்தொழிலாளி மகளான நந்தினி 600க்கு 600 எடுத்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவை பரிசளிப்பதாக பதிவு செய்துள்ளார். அதில், “ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான் பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்பட வேண்டும் பெண்ணே” என்று பதிவிட்டுள்ளார்.