நடிப்பில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டு, தற்போது எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவாகக் கலக்கி வரும் பழம்பெரும் நடிகை பாம்பே ஞானம் அவர்களோடு ஒரு சந்திப்பு...
பாம்பே ஞானம் பேசியதாவது “என்னுடைய கரியரில் இடையில் ஒரு சிறிய பிரேக் இருந்தது. என்னுடைய கணவரின் மறைவுக்குப் பிறகு ஆன்மீகமும் மேடை நாடகங்களும் தான் எனக்கு ஆறுதலாக இருந்தன. எதிர்நீச்சல் சீரியலில் ஒரு நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது. அனைவருக்கும் அப்பத்தாவாக நான் மாறியுள்ளது பெருமையாக இருக்கிறது. பெண்கள் தைரியமாக வெளியே வந்து சாதிப்பதற்கு ஒரு ஊக்கமாக எங்களுடைய மேடை நாடகக் குழு இருக்கிறது. ஒரு காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.
வாழ்க்கைக்கு கல்வி முக்கியம். அதைவிட கற்றுக்கொள்ளுதல் முக்கியம். எதிலுமே அனைவரும் செய்வதை நான் செய்ய மாட்டேன். என்னுடைய அணுகுமுறையில் சிறிய மாற்றம் இருக்கும். அது எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. தவறான மனிதர்களைக் கூட கவுன்சிலிங் கொடுப்பதன் மூலம் நம்மால் மாற்ற முடியும். ஆரம்பத்தில் சீரியலில் நடிப்பதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. பணத்திற்காக நடிக்க வேண்டிய தேவை இல்லை என்பதால் யோசித்தேன். அதன்பிறகு சம்மதித்தேன். இதுவரை நான் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்ததில்லை. நமக்கென்று சில கொள்கைகள் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
மாரிமுத்து இயல்பில் நல்ல மனிதர். அனைவரோடும் நட்பாகப் பழகக்கூடியவர். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பெண்கள் படும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதால் தான் எதிர்நீச்சல் சீரியலுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது. இன்றும் ஆணாதிக்கம் பல இடங்களில் இருந்து வருகிறது. விவாகரத்துகள் அதிகம் நடப்பதற்கும் அதுதான் முக்கிய காரணம். பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஆண்கள் சொல்லும் விஷயம் எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது. அனைத்தையும் உடைத்துக்கொண்டு என்னை நிரூபிக்க வேண்டும் என்றுதான் தொடர்ந்து இயங்கி வருகிறேன்.
சமுதாயம் கொடுக்கும் அழுத்தங்களுக்கு எப்போதும் நான் பணிய மாட்டேன். அடுத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வாழக்கூடாது. நாம் நமக்காக வாழ வேண்டும். ஆன்மீகம் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று. அது ஒரு அருமையான உணர்வு. அந்த உணர்வு உள்ளே வந்தால் ஒரு பாசிட்டிவான எனர்ஜி கிடைக்கும். சோம்பேறித்தனம் நீங்கும். தனிமை என்பதையே நம்மால் உணர முடியாது. சிறுவயதிலிருந்தே எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் சினிமாவை விட மேடை நாடகங்களின் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. எனக்கு முக்கியத்துவம் இல்லாத இடத்திற்கு எப்போதும் நான் செல்ல மாட்டேன்.” என்றார்.