இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இது தொடர்பான வழக்கில் ரியா சக்ரவர்த்தி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைதாகி பின்பு ஒரு மாதம் கழித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், "ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக்,சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரிடம் பலமுறை கஞ்சா வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிடம் வழங்கியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து அவரும் அதனை உட்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது .
ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு அவரின் காதலி ரியாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.