தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பிக்பாஸ் சீசன் 1ல் பங்குபெற்று மேலும் பிரபலமடைந்திருந்தார்.
நடிகை மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பாஜகவில் இணைந்து பணிபுரிந்தார். சில மாதங்களுக்கு முன்பு பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கும் இவருக்கு கருத்து வேறுபாடு உருவானது. இருந்தாலும் பாஜகவில்தான் பணிபுரிந்தார்.
ராகுல் காந்தியை கடுமையாக சாடியும், பிரதமர் மோடியை மிகவும் பாராட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கொண்டே வந்தார். இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது.
வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.
சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விஸ்வாசத்துடனும் இருப்பேன்.
அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுரானின் இத்தகைய முடிவிற்கு காரணம் பாஜகவிலுள்ள கோஷ்டி பூசலே என்று பலர் விமர்சனம் செய்தார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில், “ஒரு இடைவெளி எடுப்பது இத்தனை அமைதியின்மையைத் தரும் என்று நான் நினைக்கவில்லை. நான் ஏற்கனவே விலகிவிட்டேன் என்று டாக்டர் தமிழிசை பொய் கூற மாட்டார் என நம்புகிறேன். இடைவெளி எடுப்பதன் அர்த்தம் என்னவென்றும் அவருக்குத் தெரியும் என நம்புகிறேன். எப்படியோ நான் வெளியேறுவது குறித்து அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார். தயவு செய்து நான் அமைதியாக இடைவெளி எடுத்துக்கொள்ள விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.