2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் தொலைபேசி உரையாடல் வைத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கிய வெளியிட்டிருந்தார். 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது வாய் திறந்துள்ளார். அதில்...
''இந்தப் படம் எடுத்தது நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். எனக்கு உண்மையில் கலவையான விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. ஒரு சிலர்தான் இப்படத்தை வசை பாடுகிறார்கள். சிம்புவைக் கேட்டால், அந்த மீம் எல்லாம் அவருக்கெதிராக யாரோ காசு கொடுத்து ஆள் வைத்து செய்கிற வேலை என்கிறார். எனக்குத் தெரிந்த பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லோருமே கலவையான விமர்சனங்கள் வருவது நல்லது என்றே கருதுகிறார்கள். இதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே எனக்குப் பெரிய விஷயம் தான். ஏனென்றால் நான் ’பிகில்', 'சர்கார்' போன்ற படம் எடுக்கவில்லை. குறும்படம் எடுத்திருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் அது மக்களைச் சென்றடைந்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.